இராமர் உண்மையிலேயே வாழ்ந்தவரா அல்லது கற்பனைப் பாத்திரமா என்ற விமர்சனம் தலை தூக்கியிருந்த சமயத்தில் அதற்கு பதில் சொல்லப்புகுந்த ராமகோபாலன் நபிகள் நாயகம் பற்றி இப்படிக் கேள்வி கேட்க முடியுமா? என்று எதிர் விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு மறுப்பு அளிக்கும் வகையில் உணர்வில் எழுதப்பட்ட கட்டுரையில் ''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கற்பனைப் பாத்திரமன்று. அவர் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு; அறிவியல் பூர்வமான நிரூபணங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரைக் கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடு வது மடத்தனம்'' என குறிப்பிட்டிருந்தோம். (உணர்வு 5-11-2007)
இராமர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் இவ்வுலகில் வாழ்ந்த உண்மையான பாத்திரம் என்பதற்கு சான்று உள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.
உணர்வில் எழுதப்பட்டதை ஒருவர் விமர்சிப்பது என்றால், எழுதப்பட்டது குறித்துதான் விமர்சிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கற்பனைப் பாத்திரமே என்று சான்றுகளை எடுத்துக்காட்ட வேண்டும். அல்லது நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார் என்பதை நிரூபிக்க இயலுமா என்று அறைகூவல் விட வேண்டும்.
ஆனால் பகுத்தறிவு என்ற போர்வையில் மூட நம்பிக்கைகளை மூட்டை மூட்டையாக முதுகில் சுமந்துள்ள திராவிடக் கழகத்தின் மாதமிருமுறை ஏடான உண்மை எனும் ஏடு தனது அறியாமையை பறைசாற்றும் வகையில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
'புஷ்பக விமானமும் புராக் விமானமும்' என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் உணர்வில் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகளை எடுத்துக் காட்டி சில வினாக்களை எழுப்பியுள்ளது.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் புராக் என்ற மிருக விமானத்தில் ஏறி மிஹ்ராஜ் என்கிற விண்வெளிப் பயணம் சென்றதாக இஸ்லாம் மார்க்கத்தில் நம்பப்படுகிறது (நூல் புகாரி : 3207).
இராமன் சென்ற புஷ்பக விமானமும் முகம்மது நபி சென்ற புராக் விமானமும் எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?
புராக் விமானத்தில் முகம்மது நபி அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சிக்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? ('உண்மை' ஏடு ஜுன் 1 - 15, 2008)
இந்தக் கேள்வியின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழவில்லை, அவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதிடும் அளவுக்கு போலி பகுத்தறிவாளர்களுக்கு பகுத்தறிவு முற்றிப் போய் உள்ளது.
இஸ்லாம் குறித்த இந்தக் கேள்விகளையும், இதைத் தொடர்ந்து உண்மை ஏடு எழுப்பும் அத்தனை வாதங்களையும் பகுத்தறிவோடு எதிர்கொள்ள உணர்வு இதழ் தயார் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
போலி பகுத்தறிவுவாதிகள் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள அறியாமையையும், போலி பகுத்தறிவுவாதிகளிடம் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளையும் தோலுரித்துக் காட்டுவதற்கு முன் உண்மை ஏடு ஏற்கனவே நம்மிடம் சூடுபட்டு பல வருடங்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்த வரலாற்றை நினைவுபடுத்துகிறோம்.
'அல் ஜன்னத்' ஏட்டின் ஆசிரியராக பீ.ஜே. இருந்தபோது அதில் இடம் பெற்ற ஏ.கே. அப்துர் ரஹ்மான் அவர்களின் கட்டுரை குறித்தும், உண்மை ஏடு இதுபோல் விமர்சனக் கட்டுரை எழுதியது.
இன்றைய அறிவியலை திருக்குர் ஆன் அன்றைக்கே சொன்னது என்று எழுதப்பட்ட கட்டுரையை மறுக்கப் புகுந்த உண்மை ஏடு ''அல் ஜன்னத் ஏட்டில் எழுதப்பட்டதுபோல் எந்த அறிவியல் அறிஞரும் கூறவில்லை'' என்ற ரீதியில் தனது விமர்சனக் கட்டுரையை எழுதியிருந்தது. நிரூபிக்க இயலுமா என சவாலும் விட்டிருந்தது.
இதற்கு பதிலடியாக அல் ஜன்னத் ஏட்டில் ஏ.கே. அப்துர் ரஹ்மான் அவர்கள் அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்து வைத்து தொடர் கட்டுரை எழுதினார்.
நேர்மையான சிந்தனையும், பகுத்து உணரும் அறிவும் உண்மை ஏட்டை நடத்துவோருக்கு இருந்தால் இந்த வாதங்களை மறுத்து கட்டுரை எழுதியிருக்க வேண்டும் அல்லது நாங்கள் தவறாக எழுதிவிட்டோம் என்று வருத்தம் தெரி வித்திருக்க வேண்டும். ஆண்டுகள் 15 ஓடிய பிறகும் இன்றுவரை உண்மை ஏடு வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டது.
இந்தப் பழைய வரலாறு மக்களுக்குத் தெரிந்திருக்காது என்ற எண்ணத்தில் 'உணர்வு' ஏட்டில் எழுதப்பட்ட ஒரு பாராவைப் பிடித்துக் கொண்டு விமர்சனம் செய்திருக்கிறது உண்மை ஏடு.
இனியும் இதுபோன்ற விமர்சனம் தொடரும் என்ற எச்சரிக்கை வேறு விட்டுள்ளது. பகுத்தறிவு என்ற பெயரில் இவர்கள் செய்யும் கேலிக் கூத்துகளை நாம் விமர்சிக்கப் புகுந்தால் தலை தெறிக்க ஓட்டம் எடுக்கும் முடிவை பெரியார் தொண்டர்கள் எடுப்பார்கள் என்று நாம் மறு எச்சரிக்கை விடுக்கிறோம்.
''அறிவியலுக்கு ஜால்ரா அடித்து தங்களின் வேதங்களையும், கடவுள்களையும் காப்பாற்றிக் கொள்ளும் நிலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் இதுபோன்ற பெரியாரின் பகுத்தறிவுச் சவுக்கடி இன்னும் தொடரும்'' என்று உண்மை ஏடு மிரட்டியுள்ளது.
மிஹ்ராஜ் பயணம் குறித்து மட்டு மல்ல... இன்னும் பல விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்க முடியும்.
கடவுள் இருப்பதாக நம்புகிறீர்களே, அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
மரணித்தபின் மனிதன் உயிர்ப்பிக்கப்படுவான் என்று நம்புகிறீர்களே, அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
சொர்க்கம், நரகம் என்கிறீர்களே, அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
வானவர்கள், ஷைத்தான்கள் இருப்பதாக நம்புகிறீர்களே அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
இதுபோன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்கலாம்.
எதையெடுத்தாலும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா என்று கேட்பது மூடர்களின் கேள்வியே தவிர பகுத்தறிவாளர்களின் கேள்வி அல்ல...
அறிவியல் சோதனைக்கு உட்படுத்தத் தக்கவைகளைத்தான் அறிவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஒன்றை நம்புவதற்கு அறிவியல் மட்டுமே போதுமான சாதனம் அல்ல என்பதை இந்தப் பகுத்தறிவாளர்கள் முதல் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விரும்புகிறான். இவன் அவனை விரும்புகிறான் என்று அறிவியல் ரீதியில் நிரூபிக்க முடியுமா?
ஒருவன் முன்னால் சுவையான உணவு உள்ளது. அந்த உணவில் அவன் ஆசைப்படுகிறானா இல்லையா என்பதை அறிவியல் மூலம் நிரூபிக்க முடியுமா?
அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத பல விஷயங்கள் பகுத்தறிவுப்பூர்வமானதாக இருப்பதை மறுப்பவன் பகுத்தறிவுவாதியே அல்ல.
இந்தப் போலி பகுத்தறிவுவாதிகள் கேட்ட கேள்விக்கு அவர்களது முதுகெலும்பை முறிக்கும் பதிலைத் தரவுள்ளோம். அதற்கு முன்னால் சில அடிப்படையான விஷயங்களை அனைவருக்கும் (போலி பகுத்தறிவாளர்களுக்கு) நாம் விளக்க வேண்டியுள்ளது.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முஹம்மது என்ற மனிதர், தமக்கு இறைவனிடமிருந்து செய்திகள் வருவதாக வாதிட்டார். அன்றைய மக்கள் அவரது நாற்பதாண்டு கால தூய்மையான வாழ்க்கையைக் கண்டு அவர் மேல் மதிப்பு வைத்திருந்ததால் அவரை இறைவனின் தூதர் என்று நம்பினார்கள்.
எந்தச் செய்திகள் இறைவனிடமிருந்து வருகிறது என்று முஹம்மது அவர்கள் கூறினார்களோ அதுதான் திருக்குர்ஆன். இந்தக் குர்ஆனைத்தான் முஹம்மது நபியவர்கள் வேதம் என்று கூறினார்கள் என்பதை நிரூபிக்க தாஷ் கண்ட், இஸ்தான்பூல் ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதிகள் சான்று கூறிக்கொண்டிருக்கின்றன.
முஹம்மது நபி அவர்கள் எதை இறைவனின் செய்திகள் என்று கூறினார்களோ அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது எந்தப் பகுத்தறிவாளனும் அதை முஹம்மது அவர்களின் வார்த்தை என்ற முடிவுக்கு வரமாட்டான். அகில உலகையும் படைத்து பராமரிக்கும் பேரறிவாளனாகிய இறைவனின் கூற்றாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத்தான் வருவான்.
நபிகள் நாயகம் காலத்தில் பூமி உருண்டை வடிவமானது என்ற அறிவு மனிதனுக்கு இருக்கவில்லை.
ஆனால் பூமி உருண்டை என்பதையும், கோள்களும், துணைக் கோள்களும் சுழல்கின்றன, சுற்றுகின்றன என்பதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. நாத்திகர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால் இதனை முஹம்மது நபி கூறினார்.
இதை முஹம்மது நபியால் எப்படிக் கூற முடிந்தது என்பதற்கான அறிவியல் விளக்கத்தை பெரியாரின் அடிபொடிகள் கூறத்தயாரா?
அன்றைக்கு வாழ்ந்த எந்த மனிதனும் அன்றைக்கு இருந்த அறிவைக் கொண்டு இதைக் கூறமுடியாது என்று நாங்கள் பகுத்தறிவோடு முடிவு செய்கிறோம். மனிதனைவிட பேராற்றல் மிகுந்தவனிடமிருந்துதான் இச்செய்தி வந்திருக்க வேண்டும் என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ்லிம்களாகிய நாங்கள் முடிவு செய்கிறோம்.
சூரியன் பல்லாயிரக்கணக்கான மைல் வேகத்தில் அதன் கோள்களை இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் உண்மை முஹம்மது நபியின் காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் திருக்குர்ஆன் இதைத் தெளிவான வார்த்தைகளால் கூறுகிறது. பெரியாரடிகளின் பாஷையில் முஹம்மது இவ்வாறு கூறியுள்ளார்.
எந்த மனிதனும் இந்த அறிவைப் பெற்றிராத காலத்தில் இதை முஹம்மது நபி எவ்வாறு கூறினார் என்று பகுத்தறிவுப் பூர்வமான விளக்கம் கூற போலி பகுத்தறிவாளர்கள் தயாரா?
பூமியின் ஈர்ப்பு விசை குறித்த அறிவு முஹம்மது நபியின் காலத்து மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இதைப் பற்றி குர்ஆன் பேசுகிறது. போலி பகுத்தறிவுவாதிகள் பாஷையில் முஹம்மது கூறியிருக்கிறார்!
எனவே இதை முக்காலமும் அறிந்த பேரறிவாளன் இறைவன்தான் கூறியிருக்க முடியும் என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ் ம்கள் நம்புகிறோம்.
முஹம்மது அன்றைக்கே இதை எப்படிக் கூறினார் என்பதற்கான அறிவியல் விளக்கத்தை போலி பகுத்தறிவுவாதிகள் கூறத்தயாரா?
பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும் அண்ட சராசரங்கள் உருவான விதம் பற்றியும் முஹம்மது நபியின் காலத்து மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதை எப்படி முஹம்மது சுயமாகக் கூறியிருக்க முடியும்?
இரண்டு கடல்களுக்கிடையே கண்களுக்குப் புலப்படாத திரை ஒன்று உள்ளது. அதன் காரணமாக இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஞானம் முஹம்மது நபி காலத்து மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இதை தெளிவான வார்த்தைகளால் திருக்குர்ஆன் கூறுவது எப்படி?
போலி பகுத்தறிவுவாதிகள் இதற்கு பகுத்தறிவுக்கேற்ற விளக்கம் தரத்தயாரா?
தேனீயின் வாய் வழியாக தேன் உற்பத்தியாகிறது என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலத்தில், தேனீ உணவாக உட்கொண்ட குளுக்கோஸ் செரிமானம் ஆகி அதன் வயிற்றி ருந்துதான் தேன் வெளிப்படுகிறது என்ற அறிவியல் உண்மையை 1400 ஆண்டுக ளுக்கு முன் வாழ்ந்த மனிதரால் எப்படிச் சொல்ல முடிந்தது? இதற்கான பகுத்தறிவுப் பூர்வமான பதிலை போலி பகுத்தறிவுவாதிகள் தரத் தயாரா?
விண்வெளிப் பயணம் சாத்தியம் என்பதையும் அதற்கேற்ற சாதனத்தின் மூலம்தான் செல்ல இயலும் என்பதையும், அன்றைக்கே முஹம்மது நபி சொன்னது எப்படி? ஐயா போலி பகுத்தறிவாளர்களே! இதற்கு விடை சொல்லத் தயாரா?
இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி கூறியதை நாங்கள் அறிந்து இது முஹம்மது நபியின் கூற்று அல்ல என்று பகுத்தறிவுக்கேற்ப முடிவு செய்கிறோம். முஹம்மது நபி வாதிட்டதுபோல் அது இறைவனின் வார்த்தை என்று பகுத்தறிவு தீர்ப்பளிப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறோம்.
எப்போது நம்மை மிஞ்சிய பேராற்றல் மிக்க சக்தி லி இறைவன் இருப்பதாக பகுத்தறிவைப் பயன்படுத்தி நம்பிவிடுகிறோமோ அந்த இறைவன் கூறும் மறுமை, சொர்க்கம், நரகம், மிஹ்ராஜ் உள்ளிட்ட அனைத்தையும் படைத்தவனே கூறுவதால் அவனுக்கு அது இயலும் என்பதால் நம்புகிறோம்.
சொர்க்கத்தை, நரகத்தை, மிஹ்ராஜை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதாக இஸ்லாம் வாதாடவில்லை என்பதை பீடிகையாகக் கூறிக் கொள்கிறோம்.
போலி பகுத்தறிவுவாதிகள் தயார் என்றால் கீழ்க்கண்ட அறை கூவலை விடுக்கிறோம்.
குர்ஆன் கூறுகின்ற அறிவியல் உண்மைகளை அதற்கான அறிவியல் ஆதாரங்களோடு பொது மேடையில் நாங்கள் எடுத்துக் கூறுகிறோம். இதை எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது கூறினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் அளிக்க வீரமணி வகையறாக்கள் தயாரா?
அதுபோல் பகுத்தறிவாளர்கள் நியாயப்படுத்தும் பல மடமைகளைப் பற்றி நாங்கள் கேள்வி கேட்போம். அதற்கு அறிவியல் பூர்வமாக பொது மேடையில் விளக்கம் தர போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா?
பகுத்தறிவும், சிந்தனையும் 'உண்மை' ஏட்டுக்கு இருந்தால் இந்த பகிரங்க அறைகூவலை ஏற்க முன் வரவேண்டும்.
அடுத்தடுத்த தொடர்களில் எடுத்து ரைக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் அறைகூவல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல் க் கொள்கிறோம்.
போலி பகுத்தறிவுவாதிகளுக்கு முதுகெலும்பை முறிக்கும் பதில்கள் இன்னும் வரும்... இன்ஷா அல்லாஹ்.