முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் உண்மை எனும் ஏடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் பற்றி கிண்டலடித்து கட்டுரை எழுதியதையும், 'உண்மை' ஏட்டின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னால் புரிந்து கொள்ள சில விஷயங்களையும் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.
மிஹ்ராஜ் பற்றிய உண்மை ஏட்டின் விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன்னால் போலி பகுத்தறிவுவாதிகளுக்குச் சொல்ல வேண்டிய சில செய்திகளையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
மதவாதிகள் மூடநம்பிக்கை மிக்கவர்கள், சுயமரியாதை அற்றவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் போலி பகுத்தறிவுவாதிகள் முதலில் தங்களின் நடவடிக்கைகளை பகுத்தறிவுப்பூர்வமாகவும் அறிவியலுக்கு ஏற்றவாறும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
மதவாதிகள் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் அறிவியல்பூர்வமாக அமைத்துக் கொண்டதாக உரிமை கொண்டாடுவதில்லை. அவர்களிடம் சில மூடநம்பிக்கைகள் இருப்பதை மன்னித்துவிடலாம். ஆனால் பகுத்தறிவையும், சுயமரியாதையையும், ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ள வீரமணி வகையறாக்களிடம் மூட நம்பிக்கை இருந்தால் அது மன்னிக்க முடியாததாகும்.
திராவிட இனம்
போலி பகுத்தறிவுவாதிகள் தம்மை திராவிடர் கழகம் என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். மனித குலத்தை ஆண்கள், பெண்கள் என்று வகைப்படுத்துவதில் அறிவியல் பூர்வமான நிரூபணம் இருக்கிறது. மனித குலத்தை இரத்த வகைகளின் அடிப்படையில் குரூப்களாக வகைப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும்.
மனித குலத்தை அவர்களின் நடத்தை அடிப்படையில் நல்லவன், கெட்டவன் என்று வகைப்படுத்துவது அறிவுப்பூர்வமானது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
மனிதர்களை திராவிடர் எனவும், ஆரியன் எனவும் இவ்விரண்டிலும் சேராதவர்கள் எனவும் வகைப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?
ஒரு ஆரியனின் உடலையும், திராவிடனின் உடலையும், இரண்டிலும் சேராதவரின் உடலையும் அறியலின் அனைத்து வகையில் சோதித்துப் பார்த்தாலும் அந்த அறிவியல் காரணமாக இவர் திராவிடர், இவர் ஆரியர் என்று நிரூபித்துக் காட்ட வீரமணி வகையறாக்கள் முன் வருவார்களா?
சிந்திக்கும் திறன் குறைந்த காலத்தில் சிலர் தம்மை ஆரியர் என்று வகைப்படுத்திக் கொண்டனர். மற்றும் சிலர் தம்மை திராவிடர் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். இந்த மூடத்தனத்தை சிந்திக்காமல் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது எந்தவகையான பகுத்தறிவு என்பதை போலி பகுத்தறிவுவாதிகள் பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?
திராவிடன் எல்லாம் நல்லவன் என்றும், ஆரியன் எல்லாம் கெட்டவன் என்றும் கூறுவதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?
திராவிடனான மலையாளியும், திராவிடனான கன்னடனும், திராவிடனான தெலுங்கனும், திராவிடனான தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்களே! திராவிடன் தண்ணீர் தர மறுப்பதால் நாம் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று போலி பகுத்தறிவுவாதிகள் கூறுவார்களா?
ஆரியன் எல்லாம் கெட்டவன் என்று ஒரு பக்கம் மூட நம்பிக்கையை விதைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் ஆரியரான ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தீர்களே! இந்த இரண்டில் எது பகுத்தறிவுப்பூர்வமானது? எது அறிவுப்பூர்வமானது? போலி பகுத்தறிவுவாதிகளால் விளக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற மூடநம்பிக்கைக்கு பகுத்தறிவு சாயம் பூசும் போலி பகுத்தறிவுவாதிகளே! உங்கள் நம்பிக்கைப்படியே திராவிடக் குரங்கிலிருந்து திராவிடனும், ஆரிய குரங்கிலிருந்து ஆரியனும் தோன்றினான் என்றால் அதை நிரூபிக்க முடியுமா? டார்வின் தத்துவத்தின்படி கூட உங்களால் இதை நிரூபிக்க முடியாது.
உங்கள் பகுத்தறிவே பல்லிளிக்கும்போது மற்றவர்களிடம் பகுத்தறிவு வாதம் பேச கொஞ்சமாவது வெட் கப்பட வேண்டாமா?
ஜீனோம் இரகசியம்
மனிதனின் ஜீன்களைப் பற்றியும் இரத்த வகைகளைப் பற்றியும், உடலின் உட்கூறு பற்றியும், முழு அறிவு இல்லாத காலத்தில் டார்வின் என்பவன் வெளித் தோற்றத்தின் அடிப்படையில் ஊகமாக (அறிவியல் பூர்வமாக அல்ல) குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறினான். அவன் காலத்து அறிவு அவ்வளவுதான் என்பதால் டார்வினை மன்னித்து விடலாம்.
ஆனல் அறிவியல் பூர்வமாக இது பொய் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் அதே மூட நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வது எந்த வகை பகுத்தறிவு?
போலி பகுத்தறிவுவாதிகளுக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதை அறிவியல் நிரூபணத்துடன் நிரூபித்துக் காட்ட நீங்கள் தயாரா?
மனிதன் எந்த இனத்திலிருந்து வந்தவனோ அந்த இனமும் மனித இனமும் உடலின் உட்கூறு விஷயத்தில் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதிலிருந்து இது வந்தது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகும்.
மனிதனின் இரத்தம், குரங்கின் இரத்தம் இரண்டையும் சோதித்துப் பார்த்து குரங்கின் இரத்தம் மனிதனின் இரத்தத்திற்கு 90 சதவீதம் நெருக்கமாக உள்ளது என்று நிரூபித்தால் இதில் ஏதோ அறிவியல் இருக்கிறது என்று முடிவு செய்ய இயலும்.
மிருகங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது குரங்கின் இரத்தம் மனித இரத்தத்துடன் எந்த வகையிலும் ஒத்துப்போகவில்லை. அடர்த்தி, வெள்ளை, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட எதுவுமே மனித இரத்தத்திற்கு நெருக்கமாக இல்லை என்று கண்டறிந்து விட்டனர்.
மிருகங்களில் பன்றியின் இரத்தம் மட்டுமே மனிதனின் இரத்தத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்பதுதான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓரளவாவது அறிவியல் பூர்வமாக நடக்க போலி பகுத்தறிவுவாதிகள் விரும்பினால் பன்றியிலிருந்து மனிதன் தோன்றியிருக்கலாம் என்று கூறினால் அது டார்வின் ஊகத்தை விடச் சிறந்ததாக இருக்கும்.
அதுபோல் மனிதனின் இதயம் செயல் இழந்து போவதால் பலரும் மரணிக்கிறார்கள். எனவே மிருகங்களின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்த முடியும் என்றால் பலரது உயிரைக் காப்பாற்றலாமே என்று விஞ்ஞானிகள் முயன்றனர்.
குரங்கின் அடுத்த மேல்நிலைதான் மனிதன் என்பது உண்மையாக இருந்தால் குரங்கின் இதயம் மனிதனின் இதயத்துக்குச் சமமானதாக அல்லது அதிக நெருக்கமானதாக இருக்க வேண்டுமல் லவா?
விஞ்ஞானிகளின் முடிவு டார்வினைப் பொய்ப்பிக்கும் வகையில்தான் அமைந்தது. இதயத்தின் அளவு, அதன் துடிப்பு, அது 'பம்ப்' பண்ணும் வேகம் உள்ளிட்ட எதிலுமே மனிதன் இதயத்துடன் குரங்கின் இதயம் கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை என்று கண்டறிந்தனர்.
எந்த மிருகத்தின் இதயத்தை விடவும் பன்றியின் இதயமே மனிதனின் இதயத்துக்கு நெருக்கமானது என்று கண்டறிந்து விட்டனர்.
அறிவியல் பூர்வமாக மனிதனுக்கும், குரங்குக்கும் எந்த நெருக்கமும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் குரங்கின் புதல்வர்கள் இனிமேல் தம்மை பன்றியின் புதல்வர்கள் என்று அறிவிக்கத் தயாரா?
இதைவிட முக்கியமானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீனோம் இரகசியம் துரையைச் சேர்ந்த பிறமலை கள்ளர் சமுதாயம் உள்ளிட்ட உலகின் பல மக்களின் ஜீன்களை சோதித்து விஞ்ஞானிகள் எடுத்த முடிவு என்ன?
மனித குலம் முழுவதும் ஒரே ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் என்பதுதான் அந்த முடிவு.
(இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப் புகள் போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு தெரியாவிட்டால் இந்தியா டுடேயில் மிகவும் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக இது பற்றி சிறப்பிதழ் போட்டார்கள். அதையாவது வாசிக்கட்டும்).
மனிதர்களில் திராவிடர், ஆரியர் என்பதெல்லாம் கிடையாது. அனைவருமே ஒரே தாய், தந்தையிலிருந்து பிறந்தவர்கள் என்று இஸ்லாம் கூறுவதுபோலவே அறிவியலும் கூறுகிறது என்பதை போலிப் பகுத்தறிவுவாதிகள் கவனிக்கட்டும்.
பிறந்த நாளும், நினைவு நாளும்
போலிப் பகுத்தறிவுவாதிகள் பெரியாரின் பிறந்த நாள், இறந்த நாள் என்று குறிப்பிட்ட நாளில் கொண்டாடுகின்றனர்.
பிறந்தநாளின்போது இவர்கள் செய்யும் மூடநம்பிக்கைகளைத் தனியாகப் பார்ப்போம். பிறந்த நாள், இறந்த நாள் என்று ஆண்டுதோறும் கொண்டாடுவது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது என்பதை போலி பகுத்தறிவுவாதிகள் நிரூபிக்கத் தயாரா?
01.01.1900 த்தில் ஒருவர் பிறந்ததாக வைத்துக் கொள்வோம். அந்த நாள்தான் அவரது பிறந்த நாள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. 01.01.1901, 01.01.1902 என்று அடுத்தடுத்த வருடங்களில் வரும் நாளை பிறந்த நாள் என்று கூறுவது அறிவியலுக்கு எதிரானது இல்லையா?
01.01.1900 என்பது போய்விட்டது. அறிவியல் பூர்வமாக அந்த நாள் திரும்பி வரப்போவது இல்லை. 01.01.1901 என்பது 01.01.1900த்தில் பிறந்தவரின் பிறந்த நாளாக எப்படி ஆகும்? 01.01.1901ல் பூமி ரிவர்சில் சுற்றி 01.01.1900த்தை அடைகிறதா?
பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று போலி பகுத்தறிவுவாதிகளால் எள்ளி நகையாடப்படுவோர் பிறந்த நாள், நினைவு நாள் என்று மூடத்தனமாக அறிவியலுக்கு எதிராக முடிவு செய்ததை கண் மூடி நம்பிக் கொண்டு இவர்களும் பின்பற்றுகின்றனர் என்பதைத் தவிர, இதில் எள்ளின் முனையளவும் அறிவியல் கிடையாது.
பூமியின் சுழற்சி, சூரியனின் ஓட்டம் மற்றும் சுழற்சியின் அடிப்படையில் 01.01.1900தான் 01.01.1901 என்று ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட போலி பகுத்தறிவுவாதிகள் முன் வரவேண்டும்.
மற்றவர்கள் எப்படி உணர்வுப்பூர்வமாக அந்தக் காரியத்தையும் செய்து வருகிறார்களோ அதுபோலதான் பகுத்த றிவின் மொத்த குத்தகைதாரர்களும் நடக்கின்றனர். மற்றவர்களின் நம்பிக்கைக்கு அறிவியல் விளக்கம் கேட்பதற்கு முன்னால் தங்களின் இந்த நம்பிக்கையையும் அறிவியல் ஆதாரத்துடன் வீரமணி வகையறாக்கள் நிரூபிக்க தயாரா என்பதை அறைகூவலாக முன் வைக்கிறோம்.
சந்தி சிரிக்கும் உங்கள் சுயமரியாதை யையும், போலி பகுத்தறிவையும் இன்னும் கிழித்து எறிய வேண்டியுள்ளது. அதை முடித்துவிட்டு மிஹ்ராஜ் பற்றி பதில் தருவோம்.