முஸ்லிம்களையும் நபிகள் நாயகத்தையும் வம்பிக்கிழுத்த பொய் பகுத்தறிவுவாதிகளின் "உண்மை" எனும் ஏட்டுக்கு உணர்வு இதழ் விடுத்துக்கொண்டிருக்கும் அறைகூவின் தொகுப்பு!


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 15

பெரியார் அவர்கள் திருக்குறளைப் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களை நாம் பார்க்கும்போது, அவர் தீவிரமான பிராமண எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்துடன் மட்டும் அணுகியுள்ளார். பகுத்தறிவுக்கு ஏற்றதா என்ற அடிப்படையில் அனைத்தையும் அவர் அணுகவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். பெரியாரின் பல்வேறு கொள்கைக்கு நேர் எதிராக திருக்குறள் அமைந்திருந்தும், அவர் எப்படியெல்லாம் அதற்கு வக்காலத்து வாங்குகிறார் என்பதைக் காணுங்கள்!

குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பாக கருத்துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியதுதான். அத்தகைய மாற்றத்துக்கு இடம் தருவதுதான் குறள். குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது எனலாம். காய்கனிகள், தானியங்கள் இவை அபரிதமாகக் கிடைக்குமானால் மாமிசம் திண்ண வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது. (வரலாற்றுச் சுவடுகள் 4 விடுதலை 10-8-2008)

இவ்விமர்சனத்தின் துவக்கத்திலேயே பெரியார் செய்துகொள்ளும் சமரசம் தெளிவாகத் தெரிகிறது. குறளில் இன்றைய நிலைக்குப் பறம்பாக சில கருத்தக்கள் இருக்கலாம் என்று மென்மைபடுத்தியும், உறுதிபடுத்தும் வகையிலும் கூறுகிறார். 'இருக்கலாம்' என்று கூறாமல் 'இருக்கிறது' என்று கூறுவதுதான் நேர்மையான விமர்சனமாகும். விமர்சித்தது போலவும் இருக்கவேண்டும். விமர்சிக்காதது போலவும் இருக்கவேண்டும் என்று இருதரப்பினரையும் 'பேலன்ஸ்' செய்வதற்காகவே 'இருக்கலாம்' என்ற பிரயோகம்.

மேலும் பெரியார் கூறும் அடிப்படைக் கொள்கைகளையே தகர்க்கும் அளவுக்கு பாரதூரமான கருத்துக்கள் திருக்குறளில் இருப்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். (இது பின்னர் எடுத்துக் காட்டப்படும்) மற்ற இதிகாசங்களையும், புராணங்களையும் பெரியார் எதிர்த்ததுபோல் திருக்குறளையும் அவர் எதிர்த்திருக்க வேண்டும். திருவள்ளுவர் படததிறப்பு விழா என்பதால்தான் அவர் இவ்வாறு சமரசம் செய்கிறார். திருக்குறளில் உள்ள அத்தகைய கருத்துக்களை மாற்றிவிட வேண்டியதுதான். அதற்கு திருக்குறள் இடம் தருகிறது எனவும் சப்பைக் காட்டுகிறார்.

பெரியார் கூறுவது உண்மையானால் அத்தகைய மாற்றத்திற்கு திருக்குறளே இடம் தந்திருக்கும்போது மாற்றப்பட்ட திருக்குறளை அவர் வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது பக்தர்களாவது அத்தகைய குறள்களை நீக்கிவிட்டு அல்லது மாற்றிவிட்டு வெளியிட்டிருக்கவேண்டும். வீரமணியோ, குறளோவியம் எழுதிய கலைஞரோ எந்த குறளையும் நீக்கவும் இல்லை, மாற்றவும் இல்லை என்பதைக் காண்கிறோம்.

மேலும் ஒரு மனிதர் எதை எழுதினாரோ அதுதான் அவரது கருத்தாகும். அவர் எழுதாத ஒன்றை அல்லது அவர் எழுதியதற்கு மாற்றமான ஒன்றை அவர் பெயரால் வெளியிடுவது அயோக்கியத்தனமே தவிர நாணயமான செயல் அல்ல.

பிள்ளையாரைக் கும்பிடுமாறு பெரியார் போதித்தார் என்று பெரியார் பெயரால் ஒருவர் எழுதினால் அவரைப்பற்றி நாம் எந்த முடிவுக்கு வருவோம். அதே முடிவுக்குத்தான் பெரியாரின் அந்த கருத்திலும் நாம் முடிவு செய்ய வேண்டும்.

வள்ளுவர் எழுதியதை மாற்றிவிட்டால் அது திருக்குறளாகவோ, வள்ளுவர் எழுதியதாகவோ ஆகாது என்பதுதான் சரியான பகுத்தறிவு. ஆனால் பெரியார் இதற்கு மாற்றமாகப் பேசுகிறார்.

திருக்குறளில் உள்ள தவறான ஒரு கருத்தை அவரே எடுத்தும் காட்டுகிறார். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தைக் கூறிய பெரியார் அதை மாற்றியமைக்குமாறு கூறாமல் அதை நியாயப்படுத்துவது எந்தவகைப் பகுத்தறிவு?

காய்கனிகள் தானியங்கள் கிடைக்குமானால் மாமிசம் தின்ன வேண்டிய அவசியம் என்ன என்று கூறி பகுத்தறிவுக்கு எதிராகவே பேசி நியாயப்படுத்துகிறார்.

தானியம் அபரிதமாகக் கிடைத்தால் மாமிசம் ஏன் என்று வள்ளுவர் கூறவில்லை. தானியம் அதிகமாகக் கிடைத்தாலும் மாமிசம் கூடாது என்றதான் வள்ளுவர் கூறியிருக்கின்றார்.

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.

என்றுதான் வள்ளுவர் கூறுகிறார். மாமிசம் சாப்பிடுவதால் உயிர்வதை நடக்கிறது. அதைத் தவிர்த்தால் எல்லா உயிரும் மனிதனைக் கை கூப்பி வணங்கும். என்பதுதான் வள்ளுவரின் வாக்கு.

தானியம் கிடைக்கிறதா இல்லையா என்பது பற்றி வள்ளுவர் பேசவில்லை. உயிரைக் கொல்லக் கூடாது என்பதற்காகவே புலாலை மறுக்கச் சொல்கிறார். உந்த உண்மையைத் தெரிந்து கொண்டே பெரியார் அவாகள் அறிவுக்குப் பொருந்தாத வகையில் நியாயப்படுத்துகிறார்.

அவரது வாதத்தில் இன்னொரு அபத்தமும் உள்ளது.

காய்கனிகள், தானியங்கள் அபரிதமாகக் கிடைத்தால் மாமிசம் ஏன் என்று கேட்பது அபத்தமான வாதமாகும். காய்கனிகள் அபரிதமாகக் கிடைத்தாலும் மாமிசத்திலிருந்து கிடைக்கும் சில சத்துக்கள் காய்கனிகளில் கிடைக்காது என்பதால்; மாமிசம் உண்ணும் அவசியம் இருக்கிறது. காய்கனியின் ருசியைவிட மாமிசத்தின் ருசி ஒருவருக்குப் பிடிக்கும் என்றால் இதன் காரணமாக அவர் மாமிசம் சாப்பிடும் அவசியம் உள்ளது.

அனைவரும் தானியத்தின்பால் சென்றுவிட்டால் அதன் விலை தாறுமாறாக ஏறிவிடும். அதைத் தவிர்ப்பதற்காக பல வித உணவுகளை உண்ணவேண்டிய அவசியம் எற்படுகிறது. ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து அதன் மூலமே வருவாய் ஈட்டும் எண்ணற்ற மக்கள் வயிறு வளர்ப்பதற்காக மாமிசம் சாப்பிடும் அவசியம் உள்ளது.

இப்படி பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டிய பல விஷயங்களை அவர் சிந்திக்கவில்லை. ஆழமான சிந்தனையோ, ஆய்வோ அவரிடம் இல்லை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து அவர் கூறுவதைப் பாருங்கள்.

முஹம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காண முடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே கொள்ளலாம். (வரலாற்றுச் சுவடுகள் 4 விடுதலை 10-8-2008)

முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்றுமே இல்லை என்று கூறி தனக்குத்தானே முரண்படுகிறார். மாமிசம் சாப்பிடுவது பற்றி வள்ளுவர் கூறியது முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லையா? மேலே நாம் எடுத்துக்காட்டியதும், இங்கே எடுத்துக்காட்டியதுமான இரண்டு மேற்கோள்களும் அடுத்தடுத்து ஒரே பாராவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மாமிசம் பற்றி வள்ளுவர் இஸ்லாத்திற்கு எதிராகக் கூறியதை எடுத்துக்காட்டிவிட்டு அடுத்த வினாடி இஸ்லாத்துக்கு எதிராக ஒன்றுமே இல்லை எனக் கூறுகிறார்.

இன்னும் ஏராளமான விஷயங்கள் இஸ்லாத்துக்கு எதிராக குறளில் உள்ளன. தலைப்பிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக அதை இங்கே தவிர்க்கிறோம்.

ஜைனர் நம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரைத் தம்மவர் என்று கூறி ஜடா முடியுடன், விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். (வரலாற்றுச் சுவடுகள் 4 விடுதலை 10-8-2008)

வள்ளவரின் உருவம் இதுதான் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர்கள் தமது இஷ்டத்துக்கு எற்ப வளைத்துக் கொண்டார்கள் என்று பெரியாரே இங்கு ஒப்பதல் வாக்குமூலம் தருகிறார்.

இந்த இழித் தன்மையை, மானமற்ற தன்மையை கவலையற்ற தன்மையை உங்களிடம் முறையிட்டுக்கொள்ள வேண்டித்தான் வள்ளுவர் படத்தை திறந்துவைக்க ஒப்புக்கொண்டேன். (வரலாற்றுச் சுவடுகள் 4 விடுதலை 10-8-2008)

வள்ளுவர் உருவம் இதுதான் என்பதற்கு அதாரம் இல்லை என்று தெரிந்து வைத்திருந்த பெரியார் பகுத்தறிவாளர் என்றால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

இதுதான் வள்ளுவரின் உருவம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க வேண்டும். இந்த வடிவம்தான் வள்ளுவரின் வடிவம் என்பதற்கு ஆதாரம் இல்லாததால் 'இதை வள்ளுவரின் உருவம் என்று நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்' என்று கூறியிருக்க வேண்டுமல்லவா?

'தெய்வங்கள் என்று கற்பனை வடிவம் தந்தவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு' என்று அவர் கேட்டு படத் திறப்பை மறுத்திருக்க வேண்டுமல்லவா?

வள்ளுவர் அல்லாத கற்பனையான வடிவத்தை வள்ளுவர் என்று நம்ப வைப்பதற்கும், கடவுள் என்று கற்சிலைகளை நம்ப வைப்பதற்கும் என்ன வேறுபாடு உள்ளது? கூர்மையான ஆய்வுக்கண் உடைய ஒருவரால் இத்தகைய மூட நம்பிக்கையை ஆதரிக்க முடியுமா?

இன்னும்கூட போலிப்பகுத்தறிவுவாதிகளின் நாளேடுகளிலும், வார ஏடுகளிலும் வரையப்படும் வடிவம்தான் வள்ளுவர் உருவம் என்று தக்க சான்று இல்லாத ஒன்றை நம்புவதும் பரப்புவதும் வடிகட்டிய மடமை தவிர வேறில்லை என்பதைப் போலி பகுத்தறிவாளர்கள் உணரட்டும்.

உண்மை திராவிடன் தீட்டிய திருக்குறள் குப்பையிலே கிடக்க, திராவிட துரோகி தீட்டிய ராமாயணமும், ஆரியர் தீட்டிய பகவத் கீதையும் அதிகாரத்தில் இருந்து வருகின்றன் (வரலாற்றுச் சுவடுகள் 4 விடுதலை 10-8-2008)

பெரியார் குறளை நியாயப்படுத்தியது பகுத்தறிவின் அடிப்படையில் அல்ல. பகுத்தறிவுக்கு எதிரான இன உணர்வின் அடிப்படையில்தான் என்பதை அவரே ஒப்பதல் வாக்குமூலமாகத் தந்துள்ளார்.

திருக்குறள் தொடர்பாக பெரியார் கூறிய மூடக் கருத்துக்கள் இன்னும் வரும். இன்ஷா அல்லாஹ்.

Blog Archive