முஸ்லிம்களையும் நபிகள் நாயகத்தையும் வம்பிக்கிழுத்த பொய் பகுத்தறிவுவாதிகளின் "உண்மை" எனும் ஏட்டுக்கு உணர்வு இதழ் விடுத்துக்கொண்டிருக்கும் அறைகூவின் தொகுப்பு!


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 13

இந்து மதததின் பண்டிகைகளையும், சடங்குகளையும் பெரியார் எதிர்த்ததற்கு ஒரே காரணம் பிராமணர் என்ற இனத்தின் ஆதிக்கம் அவற்றில் உள்ளது என்பதால்தானே தவிர அவை பகுத்தறிவுக்கு ஏற்றது அல்ல என்பதற்காக அல்ல.

இதன் காரணமாகவே பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாத மூடநம்பிக்கைகளையும், சடங்குகளையும் பெரியார் ஆதரித்து அதற்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரணங்களைக் கூறியிருப்பதை பெரியாரின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

பகுத்தறிவின் அடிப்படையில் பெரியாரின் வாதங்கள் உள்ளன. அதன் காரணமாகவே பெரியாரின் பின்னே செல்கிறோம் என பெரியாரின் அபிமானிகள் வெளியில் சொல்லிக் கொண்டாலும் தாங்கள் நஞ்சென வெறுத்த பிராமண ஆதிக்கத்தை பெரியார் எதிற்கிறார் என்ற காரணத்துக்காகவே அவர் பின்னே சென்றார்கள்.

இதன் காரணமாகத்தான் பகுத்தறிவுக்குப் பொருந்தாத வகையில் தனக்கு சிலைவைப்பதை பெரியார் ஆதரித்தபோது இவர்களும் ஆதரித்தனர். இது போல பகுத்தறிவுக்கு எதிரான பெரியாரின் இன்னும் பல கருத்துக்களை அவரது சீடர்கள் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே காரணம். தம்மால் உடைக்க முடியாமல் இருந்த பிராமண ஆதிக்கத்தை - இன இழிவை ஒழிப்பதற்கு ஒரு தலைவர் கிடைத்துவிட்டாரே என்ற எண்ணமே பெரியாரின் பின்னே சிலர் சென்றதற்கு காரணமாக இருந்தது.

இன இழிவு நீங்கும் என்பதற்காக இஸ்லாத்தில் இணைவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததற்கும் இதுவே காரணம்.

ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி பொங்கல் பண்டிகையை எடுத்துக்கொள்வோம்.

பெரியார் கூறுகிறார்...

பொங்கல் என்பது தமிழனுக்கு பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால்...விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவையெல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால்தான் முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களை பாராட்டும் மாட்டுப் பொங்கள் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது. (-விடுதலை- 14-01-1972)

பொங்கலை நியாயப்படுத்தி பெரியார் எடுத்துக்காட்டும் எந்த காரணமும் பகுத்தறிவுபூர்வமானதாக இல்லை. பாராமண ஆதிக்கத்தை எதிர்க்க இப்பண்டிகை உதவும் என்ற நோக்கம் மட்டுமே இதில் உள்ளதை அனைவரும் அறியலாம்.

விவசாயத்தில் உற்பத்தியான பொருளை அவ்வாண்டு முதல் தடவையாக சமைப்பதை பெரியார் ஒரு காரணமாகக் கூறுகிறார். இதன் காரணமாக இது தமிழனின் பண்டிகை என்றால், தமிழர்கள் அனைவரும் விவசாயிகளாக இருந்தால்தான் ஏற்புடையதாக அமையும். எந்த ஒரு சமூகத்திலும் அனைவருமோ, அல்லது பெரும்பான்மையினரோ விவசாயிகளாக இருக்க மாட்டார்கள். மிகக் குறைந்த சதவிகிதம் பேர் மட்டுமே விவசாயிகளாக இருக்கும் நிலையில் இது எப்படி ஒட்டு மொத்த தமிழரின் பண்டிகையாகும்?

விவசாயிகளாக இல்லாத 90 சதவிகிதம் தமிழர்கள் விவசாயத்தின் மூலம் எதையும் உற்பத்தி செய்திருக்க மாட்டார்கள். அதை முதல் தடவையாக சமைக்கும் நிலையும் ஏற்படாது.

பெரும்பான்மையான தமிழர்களுக்கு இக்காரணம் பொருந்தாது எனும்போது பொங்கலைத் தமிழர் பண்டிகை என்பது எப்படி பகுத்தறிவுபூர்வமானதாக இருக்க முடியும்?

மொத்த சமுதாயத்தில் சுமார் 10 சதவிகிதமாக உள்ள விவசாயிகள் அனைவருக்கும் பொருந்துமா என்றால் அதுவும் இல்லை.

தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் சரியாக விளைவதில்லை. மிகச் சில மாவட்டங்களில் மட்டுமே தை மாதத்தில் அறுவடை செய்யும் நிலை இருக்க வாய்ப்புண்டு. மழை பொய்த்ததால் அல்லது ஆறுகள் வரண்டதால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் அதிகமாக இருக்கும்போது பொங்கல் பண்டிகை ஒட்டுமொத்த விவசாயிகளின் பண்டிகையாகக்கூட இருக்க முடியாது.

தமிழகமே வரண்டுவிட்டால் அப்போது ஒருவருக்குமே இக்காரணம் பொருந்தாமல் போய்விடும்.

மேலும் பயிர்கள் பல்வேறு மாதங்களில் அறுவடை செய்யப்படுவதுண்டு. சில வேளை இரண்டு பருவங்களில் கூட அறுவடை நடக்கும். தை மாதம் ஒரு பொங்கலும், பங்குனி மாதம் ஒரு பொங்கலம் கொண்டாடவேண்டும் என்ற கருத்தையும் பெரியார் கூறும் காரணம் ஏற்படுத்துகிறது.

ஒரு ஊரில் ஒரு பகுதியில் கூட பல்வேறு நாட்களில் அறுவடை நடக்கும். சிலருக்கு தை முதல் தேதி கடந்த பின்பு கூட அறுவடை நடக்கும். இவர்களது பொங்கலுக்கு பெரியார் கூறும் காரணம் அறவே பொருந்தாது.

மேலும் அறுவடை செய்த அனைவரும் பொங்கல் தினத்தில்தான் அதை முதன் முதலாகச் சமைக்க வேண்டும் என்பதற்கு பகுத்தறிவு பூர்வமான எந்த காரணமும் இல்லை. கஷ்டத்திலுள்ளவர்கள் பொங்கலுக்கு முன்னர் அறுவடை செய்ததை பொங்கலுக்கு முன்பே சமைக்கும் நிலையிலும் இருப்பார்கள். இவர்களுக்கும் பெரியார் கூறும் காரணமும் பொருந்தாது.

மேலும் விவசாயம் என்பது உண்ணும் பொருள் மட்டுமன்று. நெல்லை உற்பத்தி செய்வது போலவே பருத்தி, மஞ்சள், சூரியகாந்தி, எள், மிளகாய், தக்காளி என்று எண்ணற்ற விளை பொருட்கள் உள்ளன. இவற்றை பயிரிடும் விவசாயிகள் அவற்றை தை மதல் நாள்தான் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்று கூறுவது பகுத்தறிவுக்கு ஏற்ற வாதம் அல்ல.

மாசி மாதம் தக்காளி பயிரிடும் விவசாயிகள் அதை பதினோரு மாதம் பாதுகாத்து பொங்கல் அன்று சமைப்பதில்லை. பொங்கல் பண்டிகையை தமிழனின் பண்டிகை என்று கருதிய பெரியார், அதற்கு கூறிய இந்த காரணம் பகுத்தறிவுப் பூர்வமானது அல்ல.

அவனவனுக்கு வசதி வரும் நாள்தான் அவனவனுக்கு பண்டிகை என்றுதான் பெரியார் வாதிட்டிருக்க வேண்டும். அப்படி கூறியிருந்தால்தான் அதில் பகுத்தறிவு இருக்கிறதென்று எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் கால்நடை ஜீவன்களைப் பாராட்டுவதற்காக மாட்டுப் பொங்கல் என்ற காரணத்திலும் பகுத்தறிவு இல்லை.

கால்நடைகளை பொங்கல் தினத்தில் மட்டும் பாராட்டுவதில் என்ன பகுத்தறிவு உள்ளது? அன்றாடம் கால்நடைகள் மனிதனுக்குப் பயன்பட்டே வருகின்றன. எனவே தினமும் அவற்றைப் பாராட்டினால் அதில் ஓரளவு பகுத்தறிவு உள்ளது என்று கருதலாம்.

அல்லது கால்நடைகளைப் பாராட்டினால், அலங்கரித்தால் அதை உணரும் அறிவு அவற்றுக்கு இல்லை என்பதால் மிருகத்தைப் பாராட்டுவது மூடநம்பிக்கை என்று கூறினால் அதை முழுப் பகுத்தறிவு என்று எடுத்துக் கொள்ளலாம்.

விவசாயத்துக்கு மாடுகள் பயன்படுவதால் மாட்டுப் பொங்கல் என்றால் விவசாயத்துக்குப் பயன்படாத பசு மாட்டுக்கு ஏன் பாராட்டு? ஆடுகளுக்கு ஏன் பாராட்டு? நகர்ப்புறங்களில் உள்ள மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுவதில்லையே? அவற்றுக்கு ஏன் பாராட்டு?

கால்நடைகள் இல்லாமல் அனைத்தும் எந்திரமயமாகி விட்ட நிலையில் 'ட்ராக்டர் பொங்கல்' கொண்டாடலாம் என்று பகுத்தறிவாளர்கள் கூறுவார்களா?

எனவே பெரியாரின் இலக்கு பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே தவிர பகுத்தறிவுவாதம் அல்ல. பெரியாரின் அபிமானிகளும், பார்ப்பன எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் அவரைப் பின்பற்றுகிறார்களே தவிர பகுத்தறிவில் உரசிப் பார்த்து அல்ல என்பதற்கு பொங்கல் பண்டிகையே போதுமான சான்றாக அமைந்துள்ளது.

இதையும் பெரியார் தெளிவாகக் கூறுகிறார்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால் பொங்கல் பண்டிகை என்பதை முதல்நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும் மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும். (-விடுதலை- 14.01.1972)

இவர்களைப் போலி பகுத்தறிவுவாதிகள் என்று அடைமொழியிட்டு அழைப்பதன் காரணம் இதுதான்.

தங்கள் நடவடிக்கையையே பகுத்தறிவுக்கு எதிராக அமைத்துக் கொண்டவர்கள் மதவாதிகளிடம் பகுத்தறிவுவாதம் பேசுவதில் எள்ளளவும் நியாயம் இல்லை.

போலிப் பகுத்தறிவுவாதிகளின் மூட நம்பிக்கை இன்னும் வரும். இன்ஷா அல்லாஹ்...

Blog Archive