முஸ்லிம்களையும் நபிகள் நாயகத்தையும் வம்பிக்கிழுத்த பொய் பகுத்தறிவுவாதிகளின் "உண்மை" எனும் ஏட்டுக்கு உணர்வு இதழ் விடுத்துக்கொண்டிருக்கும் அறைகூவின் தொகுப்பு!


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 11

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்'' என்று 8.3.1936 குடியரசு ஏட்டில் எழுதிய பெரியார் அவர்கள் தமது இரு மனைவிகளுக்கும் கூட அந்த உரிமையை வழங்கவில்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் சென்ற இதழில் தெளிவுபடுத்தியிருந்தோம்.

பெரியார் தனது மேற்கண்ட அறிவுரையைத் தானே மற்றொரு விஷயத்தில் மீறியிருக்கிறார் என்பதை இப்போது காண்போம்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்துக்கள் பொங்கல் எனும் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், காணும் பொங்கல் என்று இதில் பலவகை உண்டு.

இந்தப் பண்டிகையும் பகுத்தறிவு அடிப்படையில் எதிர்க்கப்பட வேண்டியதே என்றாலும் இப்பண்டிகையில் பிராமணர்களின் ஆதிக்கம் இல்லாத ஒரே காரணத்துக்காக பொங்கல் பண்டிகையை பெரியார் ஆதரித்தார். அதைக் கொண்டாடுமாறு வயுறுத்தினார்.

கன்னிப் பொங்கலை ஆதரித்து அவர் உதிர்த்த தத்துவத்தைப் பாருங்கள்!

இந்தப் பொங்கல் பண்டிகை என்ப தற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்பது சிறு பெண் அதாவது, பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்காக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள் அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையைச் சொல்லிக் கொடுப்பார்கள். (விடுதலை : 14.01.1972ல் பெரியார்)

பெண்களுக்குச் சமையல் கற்றுக் கொடுப்பது, பாத்திரம் கழுவக் கற்றுக் கொடுப்பது பெண்ணுரிமைக்கு எதிரானது என்று ஒருபுறம் கூறிக்கொண்டு இன்னொருபுறம் (அவரது வாதப்படி) பெண்ணுரிமைக்கு எதிராகப் பெண்ணைத் தயார்படுத்தும் கன்னிப் பொங்கலைக் கொண்டாடுவதை அவர் நியாயப்படுத்தியதில் எது பகுத்தறிவுப்பூர்வமானது?

பெரியார் கூறிய காரணத்திற்காகத்தான் கன்னிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்றால் மற்றவர்களைவிட பெரியார் பொங்கல் பண்டிகையை எதிர்க்க வேண்டுமல்லவா?

குறிப்பிட்ட நாளில் சமையல் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி அதற்காகப் பண்டிகையும் கொண்டாடினால் பெண்களை அடிமையாக்குவதை ஒட்டுமொத்த சமூகமே அங்கீகரிக்கிறது என்பதுதானே அதன் பொருள்?

எதிலுமே பகுத்தறிவுக்கு ஏற்ற பார்வை, விசாலமான சிந்தனை பெரியாரிடம் இருந்ததில்லை என்பதற்கும், தனக்குத்தானே முரண்படுவதுதான் பெரியாரின் தனித்தன்மை என்பதற்கும் இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

கன்னிப் பொங்கலை நியாயப்படுத்திட இவர் எடுத்து வைத்த காரணம் இன்னொரு வகையிலும் பகுத்தறிவுக்கு எதிரானதாக உள்ளது.

பெண்களுக்குச் சமையல் கற்றுக் கொடுப்பது குறித்த பெரியாரின் முரண்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம்.

பெண்களுக்குச் சமையல் முதலான வேலைகளைக் கற்றுக் கொடுப்பது என்றால் பெற்றோருக்கு எப்போது வசதிப்படுமோ அப்போது கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் பகுத்தறிவுப்பூர்வமானது. குறிப்பிட்ட நாளில்தான் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று திணிப்பது மதவாதிகளுக்குச் சரியாக இருக்கலாம். பகுத்தறிவுப் பகலவனுக்குச் சரியாக இருக்குமா?

அந்த நாளில்தான் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள பகுத்தறிவு தத்துவம் என்ன? வேறு நாட்களில் கற்றுக் கொடுத்தால் அதில் உள்ள மூடநம்பிக்கை என்ன? இதைப் போலி பகுத்தறிவாளர்களால் விளக்க முடியுமா?

மேலும் பெரியார் கூறுவதில் உண்மை இல்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

கன்னிப் பொங்கலை எதிர்பார்க்காமலும், பெண்கள் கன்னிப் பருவத்தை அடைவதை எதிர்பார்க்காமலும் சிறுமிகளாக இருக்கும்போதே சமையல் தொடர்பான வேலைகளைப் பெற்றோர் கற்றுக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை. "கன்னிப் பொங்கல் வரும்வரை சமையலறைப் பக்கம் வராதே'' என்று பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோர் தடை ஏதும் விதிப்பதில்லை.

அதற்கு முன் பெண்கள் சமையலறைப் பக்கமே போவதில்லை என்பது போலவும், கன்னிப் பொங்கல் அன்று தான் சமையலைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பது போலவும் பெரியார் கூறுவது தனது மனோ இச்சையை நியாயப்படுத்த பெரியார் செய்த பொய்யான கற்பனையாகும்.

மேலும் கன்னிப் பொங்கல் அன்று சோறு சமைப்பதற்கு மட்டும்தான் கன்னிப் பெண்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்.

சாம்பார், பிரியாணி, சூப் போன்றவைகளைக் கற்றுக் கொடுப்பதற்கு மட்டும் ஏன் பண்டிகை இல்லை?

13 வயதில் கன்னியாகி 22 வயதில் திருமணம் நடந்தால் முதல் வருடம் மட்டுமே அப்பெண் சமையலைக் கற்றுக் கொள்வாள் என்பதில் உண்மையிருக்க முடியும். அதன் பின்னர் எட்டு ஆண்டுகள் அவள் ஏன் கன்னிப் பொங்கல் கொண்டாட வேண்டும்? அவள்தான் முதல் வருடமே கற்றுக் கொண்டு விட்டாளே?

முதல் வருடம் கற்றுக்கொண்ட சோறு பொங்குவதையே எட்டு ஆண்டுகள் திரும்பத் திரும்பக் கற்றுக்கொள்வது ஏன்?

"பொங்கல் பண்டிகையும் பகுத்தறிவுக் கொள்கைப்படி தவறானதுதான்'' என்று அறிவித்து பொங்கல் பண்டிகையை போலி பகுத்தறிவுவாதிகள் ஏன் எதிர்க்கவில்லை? மதவாதிகள் தமது முன்னோர் கூறியதைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் தமது கடவுளாகிய பெரியார் சொல்லிவிட்டதால் அதைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

பொங்கல் பண்டிகை குறித்து பெரியார் உதிர்த்த இன்னும் பல தத்துவங்களை எவ்வாறு பகுத்தறிவுக்கு எதிராக உள்ளது என்பதை அடுத்த இதழில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.

Blog Archive